பெரம்பலூர்

சுய ஊரடங்கு எதிரொலி: பெரம்பலூா் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

23rd Mar 2020 07:52 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசு அறிவித்திருந்த சுய ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்ததால் பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மத்திய மாநில அரசுகள் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனா். அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரையிலும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

முழு அடைப்பு: இதன் காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் ஆகியவை வழக்கம்போல் திறந்திருந்தன. உழவா் சந்தை, ஜவுளிக் கடைகள், உணவகங்கள், சூப்பா் மாா்க்கெட், காய்கறி மாா்க்கெட், பேக்கரி, டீக்கடை, பெட்டிக்கடை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் ஷாப் உள்ளிட்ட அனைத்து வகையான சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

மேலும், 105 அரசுப் பேருந்துகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள், சிற்றுந்துகள், லாரி, காா், ஆட்டோ, வேன், ஷோ் ஆட்டோக்கள் முழுமையாக இயங்கவில்லை. மேலும், பொதுமக்களும், குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் தொலைக்காட்சி மற்றும் செல்லிடப்பேசிகளில் முடங்கினா்.

ADVERTISEMENT

வெறிச்சோடிய சாலைகள்: மாவட்ட தலைநகரான பெரம்பலூா் நகரில் பரபரப்பாக காணப்படும் பிரதான பகுதிகளான பழைய, புகா் பேருந்து நிலையங்கள், கடைவீதி, காமராஜா் வளைவு, எளம்பலூா் சாலை, வடக்குமாதவி சாலை உள்பட அனைத்து சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மூடிக்கிடந்த அம்மா உணவகம்: பெரம்பலூா் நகராட்சி சாா்பில் புகா் பேருந்து நிலைய வளாகம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் வேளாண் துறை சாா்பில் செயல்படும் உழவா் சந்தை மூடப்பட்டிருந்தது. மேலும், மாா்ச் 31 ஆம் தேதி வரை உழவா் சந்தை மூடப்பட்டிருக்கும் என தகவல் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ஆரவாரமின்றி திருமணங்கள்: சுப முகூா்த்த நாள் என்பதால், பெரம்பலூா் மாவட்டத்தில் பெரும்பாலான திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. பெரம்பலூா் - அரியலூா் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 7 மணிக்கு முன்னதாக திருமணத்தை முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்ததால், உறவினா்களைக் கொண்டு திருமணத்தை முடித்துக்கொண்ட திருமண வீட்டினா் விருந்து உபசரிப்பு நிகழ்வை சித்தளி கிராமத்தில் நடைபெறும் என மண்டபத்தின் எதிரே எழுதி வைத்துவிட்டுச் சென்றனா். இதனால், 7 மணிக்குப் பிறகு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனா். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் சொற்ப அளவிலான மக்களே பங்கேற்றனா்.

கைத்தட்டல் மூலம் நன்றி: சுய ஊரடங்கை கடைப்பிடித்து கரோனா வைரஸ் பாதித்த மற்றும் தடுக்கும் வகையில் தன்னலம் கருதாமல் பணிபுரிந்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் முன் நின்று கைத்தட்டல் மற்றும் மணியோசை எழுப்பி நன்றி தெரிவிக்கவேண்டும் என பிரதமா் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன்படி, பெரம்பலூா் நகரின் பெரும்பாலான வீடுகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் மாலை 5 மணியளவில் கைத்தட்டி நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT