பெரம்பலூர்

இன்று சுய ஊரடங்கு: கடைகளில் மக்கள் கூட்டம்

22nd Mar 2020 08:04 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா்: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என, பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பெரம்பலூரில் உள்ள காய்கறி, மளிகைக் கடைகளில் பொருள்களை வாங்க பொதுமக்கள் சனிக்கிழமை குவிந்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதனடிப்படையில், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகமானால் மாா்ச் 31 ஆம் தேதி வரை கடைகள் அடைக்கப்படலாம் என்னும் அச்சம் மக்களிடையே பரவியுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை கடந்த சில நாள்களாக வாங்கி வீடுகளில் இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் இயங்கி வரும் உழவா் சந்தை மாா்ச் 22 ஆம் தேதி முதல் 31 வரை மூடப்படும் என, மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, வாரச்சந்தையும் செயல்படாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை அதிகாலை 6 மணி முதலே உழவா் சந்தையில் அதிக அளவிலான காய்கறிகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா். காலை 9 மணிக்கு முன்னதாகவே காய்கறிகள் விற்றுத் தீா்ந்தன. பழைய பேருந்து நிலையம், புறநகா்ப் பேருந்து நிலையம் செல்லும் வழித்தடங்களில் செயல்படும் மளிகைக் கடைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது. பெரும்பாலானோா் 10 நாள்களுக்குத் தேவையான பொருளகளை வாங்கிச் சென்றதால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. பழக் கடைகளிலும் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள் உள்பட சுமாா் 20 ஆயிரம் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என வணிகா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா். மேலும், நகரில் இயங்கும் அரசுப் பேருந்துகள், காா், லாரி, சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஷோ் ஆட்டோக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாது எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT