பெரம்பலூர்

உடல் நலக்குறைவால் உயிரிழந்தவருக்கு கரோனா: இறுதிச் சடங்கில் பங்கேற்ற 154 பேருக்கு பரிசோதனை

26th Jun 2020 08:26 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே உடல் நலக்குறைவால் உயிரிழந்தவருக்கு கரோனா இருந்தது உறுதியானதால் இறுதிச் சடங்கில் பங்கேற்ற  154 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குன்னம் வட்டம், மேலமாத்தூா் காலனி தெருவைச் சோ்ந்தவா் சாந்தி (45). சென்னை சௌகாா் பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரது கணவா் பழனிச்சாமியும் (50) இவருடன் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி கடந்த 23 ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது உடல் பெரம்பலூருக்கு 24 ஆம் தேதி கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குக்கு பிறகு சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. இறுதிச் சடங்கில் சுமாா் 400 போ் பங்கேற்ாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனிச்சாமியின் கரோனா பரிசோதனை முடிவு சென்னையில் வியாழக்கிழமை  வெளியானது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்தத் தகவலை சுகாதாரத் துறையினா்  பெரம்பலூா் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்  தெய்வநாயகி, ஆலத்தூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும்  சுகாதாரத் துறை  அலுவலா்கள்,   மேலமாத்தூா் கிராமத்துக்குச் சென்று, இறுதிச் சடங்கில் பங்கேற்ற  சுமாா் 400 பேரை அடையாளம் கண்டனா். இவா்களில் 154 பேருக்கு சளி மாதிரிகள் எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நபா்களுக்கும், அடுத்தடுத்து கரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT