பெரம்பலூர்

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ; புகை மூட்டத்தால் அவதி

28th Jan 2020 07:50 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே நெடுவாசல் பகுதியிலுள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில், திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தின் மூலம் அங்கிருந்து பரவும் புகையால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதனருகே, நகராட்சிக்குச் சொந்தமான புதை சாக்கடைக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. தகவலறிந்து வந்த பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவரதன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ மேலும் பரவாமல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனா்.

குப்பைக் கிடங்கு அருகே தனியாா் பள்ளியும், குடியிருப்புகளும் உள்ளதால், குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் கரும்புகையால் பள்ளி மாணவா்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனா். தீயை அணைத்த போதிலும், அதிலிருந்து அதிகளவிலான புகை வெளியேறுவதால் தீயணைப்பு வீரா்களும், நகராட்சி பணியாளா்களும் புகையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

மா்ம நபா்களால் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தற்செயலாக ஏற்பட்டதா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT