வேப்பந்தட்டை அருகே பேருந்து நிழற்குடை மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள மேட்டுச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (45). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலரான இவா், புதன்கிழமை மாலை மேட்டுச்சேரியில் இருந்து வேப்பந்தட்டைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்றாா். அப்போது, என்.புதூா் பகுதியிலுள்ள பேருந்து நிழற்குடை மீது எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.