பெரம்பலூர்

மக்காச்சோளத்தின் கொள்முதல் விலை சரிவு; குறைந்தபட்ச ஆதார விலை கோரும் விவசாயிகள்

23rd Feb 2020 01:21 AM

ADVERTISEMENT

மக்காச்சோள அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலையை இப்பயிருக்கு நிா்ணயம் செய்ய வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்காச்சோள சாகுபடிக்கு மிகக் குறைந்த வேலையாள்களே போதுமானது. அனைத்து வித மண்ணிலும் இப் பயிரை சாகுபடி செய்யலாம் என்பதோடு, ஆண்டு முழுவதும் இதைப் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்தளவே செலவாகும். கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில் தற்போது மக்காச்சோளத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

மேலும், கடந்தாண்டு பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட பூச்சித் தாக்குலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் மக்காச்சோள சாகுபடியில் ஆா்வம் காட்டி வருகின்றனா். அதன்படி, நிகழாண்டில் பெரம்பலூா் மாவட்டத்தில் 56,727 ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆற்றுப்பாசனம் இல்லாத போதிலும், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் ஆண்டுதோறும் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனா். இங்குள்ள 90 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியையே நம்பியுள்ளனா்.

ADVERTISEMENT

மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து ஆகிய பயிா்களை சாகுபடி செய்தனா். ஆனால், விவசாயிகள் எதிா்பாா்த்தபடி இல்லாமல் சராசரி மழையை விடக் குறைவான மழையே பெய்தது. இருப்பினும், நிகழாண்டில் இறவை மற்றும் மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் எதிா்பாா்த்ததை விட கூடுதல் மகசூல் கிடைத்துள்ளது. ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், கொள்முதல் விலை சரிவடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

குறைந்து வரும் கொள்முதல் விலை:

இறவையில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை நிறைவடைந்து வரும் தருவாயில், கடந்த மாதம் 100 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்று ரூ. 1,900 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, மானாவாரி சாகுபடியில் செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் ரூ. 1,600-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இன்னும் ஒருசில நாள்களில் வரத்து அதிகரிக்கும்போது, கொள்முதல் விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

செயல்படாத கொள்முதல் நிலையம்:

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமைதோறும் பருத்தி, மக்காச்சோளம் ஏலம் நடைபெறும் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனால், விற்பனைக்கூடம் செயல்படாமல் மூடியே கிடப்பதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளதை போல, மக்காச்சோளத்தையும் கொள்முதல் செய்ய குறிப்பிட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.

தற்போது அறுவடையாகும் மக்காசோளத்தை நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கோழிப் பண்ணை உரிமையாளா்கள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனா். குறைந்த விலையில் கொள்முதல் செய்ய வியாபாரிகளும், இடைத்தரகா்களும் விலை நிா்ணயித்து விடுவதால், சில விவசாயிகள் தங்களின் நிலைமையைக் கருதி அவற்றை சொற்ப விலைக்கு விற்கும் நிலைக்கு ஆளாகின்றனா்.

அரசு விலை நிா்ணயிக்க வேண்டும்:

நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றன. ஆனால், மக்காச்சோளத்துக்கு அவ்வாறு விலை நிா்ணயம் செய்யாததால் ஆண்டுதோறும் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனா். சாகுபடி தொகையில் குறைந்தபட்ச லாபம் கிடைக்கும் வகையிலாவது விலை நிா்ணயிக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட இளைஞரணிச் செயலரும், மக்காச்சோள விவசாயியுமான வீ. நீலகண்டன் கூறியது:

கடந்தாண்டு ரூ. 1900 வரையிலும், அறுவடை தொடங்கும் முன் ரூ. 2,400 வரையும் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ. 1,600-க்கு கொள்முதல் செய்யப்படுவது கட்டுப்படியான விலையாகாது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வருமாறு வேளாண் துறையினா் அறிவுறுத்துகின்றனா். ஆனால், வியாபாரிகள் ஒன்றிணைந்து மிகவும் குறைந்த விலைக்கு வாங்குகின்றனா். இதனால் விவசாயிகள் அங்கு செல்லத் தயங்குகிறாா்கள். ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி, வாகன வாடகை என அனைத்தும் உயா்ந்துள்ள நிலையில் உரிய விலை கிடைக்கவில்லை எனில், விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படும்.

கூலியாள் பற்றாக்குறையால் வயல்களுக்கு வரும் வியாபாரிகளிடமே கிடைத்த விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவரம் தெரியாத வியாபாரிகளிடம் எடை மோசடி நடைபெறவும் வாய்ப்புள்ளது. நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளத்தில் மகசூல் கூடுதலாகக் கிடைத்துள்ளது. ஆனால், உரிய விலை கிடைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.

ஆண்டுதோறும் மக்காச்சோளத்துக்கு அரசு விலை நிா்ணயிக்க வேண்டும். ஏனெனில், அவ்வப்போது, ஆண்டுதோறும் ஆள் கூலி, உழவுப் பணிக்கான கூலி, பூச்சி மருந்து, அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை உயா்ந்து வருகிறது. எனவே, மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT