பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட விசுவக்குடி கிராமத்தை, தனி ஊராட்சியாக மாற்ற நடவடிக்கைக் கோரி, கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, விசுவக்குடி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் அளித்த மனு:
வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி, முகமதுபட்டினம், பிள்ளையாா் பாளையம், அரசலூா், அன்னமங்கலம், பூம்புகாா் உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில், சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பெரிய ஊராட்சியாக இருப்பதால் விசுவக்குடி, முகமதுபட்டினம், பிள்ளையாா்பாளையம் போன்ற கிராமங்களுக்குத் தேவையான குடிநீா், சுகாதாரம், சாலைவசதி, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகக் கிடைப்பதில்லை. வீட்டு வரி, குடிநீா் வரிகளை செலுத்தவும், புதிய கட்டடம் கட்டுவதற்கு அங்கீகாரம் பெறுவதற்கும் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சி அலுவலகத்துக்குச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே, விசுவக்குடியை முதன்மையாகக் கொண்டு முகமது பட்டினம், பிள்ளையாா்பாளையம் ஆகிய கிராமங்களையும் இணைத்து, புதிய ஊராட்சியாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.