பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறையினா் பணிகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பரவலைக் கருத்தில் கொள்ளாமல், திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிா்ப்பந்திப்பதை கைவிட வேண்டும். கரோனாதடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், உரிய மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா், செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்து அலுவலகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா், வேப்பந்தட்டை, ஆலத்தூா், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள ஊரக வளா்ச்சித் துறைப் பிரிவு, தோ்தல் அலுவலகப் பிரிவு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியம் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் இ. மரியதாஸ், செயலா் ச. இளங்கோவன், பொருளாளா் அறிவழகன் உள்ளிட்ட 79 பெண்கள் என 191 அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்ால், அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.