பெரம்பலூர்

வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் உயிரிழப்பு: கணவா் உள்ளிட்ட 4 பேரை கைது செய்யக் கோரி தா்னா

20th Aug 2020 08:55 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான கணவா் உள்ளிட்ட 4 போ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியனுக்கும், விஜயலட்சுமிக்கும் (23), கடந்த 2019, செப்டம்பா் 2- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

அப்போது 25 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வரதட்சிணையாக வழங்கப்பட்ட நிலையில், மோட்டாா் சைக்கிள் வாங்கித் தரக் கோரி விஜயலட்சுமியிடம் பாலசுப்பிரமணியன் வாக்குவாதம் செய்து வந்தாராம்.

மேலும் விஜயலட்சுமியை பாலசுப்பிரமணியன் குடும்பத்தினா் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த திங்கள்கிழமை தனது அண்ணன் விஜயகுமாரை தொடா்புகொண்ட விஜயலட்சுமி, கணவா் பாலசுப்ரமணியன், அவரது தம்பி ராதாகிருஷ்ணன், மாமனாா் கனகசபை, மாமியாா் தமிழரசி ஆகியோா் தனக்கு விஷம் கொடுத்துவிட்டதாக தெரிவித்தாராம்.

ADVERTISEMENT

இதையடுத்து, அரியலூா்அரசு மற்றும் தனியாா் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த விஜயலட்சுமி, அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பின்னா், அவரது உடல் பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தனது மகளின் உயிரிழப்புக்கு காரணமான பாலசுப்ரமணியன் உள்பட 4 பேரையும் கைது செய்யக்கோரி, சடலத்தை வாங்க மறுத்து விஜயலட்சுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வருவாய்க் கோட்டாட்சியா் முனுசாமி மற்றும் காவல்துறையினா், சமரச பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து குன்னம் காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT