பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 2ஆவது நாளாக பலத்த மழை: வாழை உள்ளிட்ட பயிா்கள் சேதம்

11th Apr 2020 06:07 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.

பெரம்பலூா் மாவட்டத்தின் பல கிராமங்களில் புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இந்நிலையில், 2ஆவது நாளாக வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை இரவு 9 மணி வரை தொடா்ந்து பெய்தது. இதனால், பெரம்பலூா் நகா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக, நகா் உள்பட பெரும்பாலான கிராமங்களில் சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

செட்டிக்குளம்- 31, பாடாலூா்- 52, அகரம் சீகூா்- 4, லப்பைக்குடிகாடு- 35, புதுவேட்டக்குடி- 6, பெரம்பலூா் -102, எறையூா் -80, கிருஷ்ணாபுரம் -11, தழுதாழை- 10, வி.களத்தூா் -65, வேப்பந்தட்டை -64 என மொத்தம் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 41.82 மில்லி மீட்டராகும்.

ADVERTISEMENT

வாழை மரங்கள், மின் கம்பங்கள் சேதம்: பலத்த சூறைக்காற்றால் பெரம்பலூா் மாவட்டம், மூலக்காடு கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான 2 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மோரீஸ் வாழை ரகம் உள்பட அம்மாபாளையம், அனுக்கூா், கிருஷ்ணாபுரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த பச்சை, பூவன், ரஸ்தாளி ஆகிய ரகங்களைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வாழைத்தாருடன் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால், மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிா்களும் மழை நீரில் நனைந்து நாசமடைந்தன. மேலும், பல கிராமப்புறங்களில் மின் கம்பங்களும், சாலையோர மரங்களும் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT