பெரம்பலூர்

அனைத்து விவசாய பணிகளுக்கும் இயந்திரங்களை கண்டறிய வேண்டும்

22nd Sep 2019 03:45 AM

ADVERTISEMENT


அனைத்து விவசாய பணிகளையும் மேற்கொள்ளும் இயந்திரங்களை கண்டறிய வேண்டும் என்றார் தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் தாளாளர் கி. வரதராஜன்.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன், தென்னை மரத்தின் நண்பர்கள் என்னும் தலைப்பில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய திறன் வளர்த்தல் பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது. விழாவில், வரதராஜன் பேசியது:  
விவசாயத்தில் நிலவும் பிரச்னைகளுள் முக்கியமானது வேலையாள் பற்றாக்குறை. இயந்திரமயமாக்கல் ஒன்றே இதற்கான தீர்வாகும். அனைத்து விவசாயப் பணிகளையும் மேற்கொள்வதற்கு, இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். 
தென்னை மரம் ஏறுவதற்கு தற்போது கிராமத்தில் ஆள்கள் கிடைப்பதில்லை. கருவியைக்கொண்டு தென்னை மரம் ஏறுவதற்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு ரூ. 4,500 மதிப்புள்ள கருவியும், இலவசமாக தென்னை வளர்ச்சி வாரியம் வழங்குகிறது. 
ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், தென்னை வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து 40 நபர்களுக்கு பயிற்சி மற்றும் கருவி வழங்க திட்டமிட்டு, முதல்கட்டமாக 20 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2 ஆம் கட்டமாக அக்டோபரில் நடைபெறும் பயிற்சியில் 20 நபர்களுக்கு வழங்குகப்படுகிறது. 
இதன்மூலம், பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சியில் பங்கேற்ற இளைஞர்கள் தென்னை நாற்று உற்பத்தி செய்தல், வாடகைக்கு தென்னை மரம் ஏறுதல் உள்ளிட்ட பணிகளை செய்து, தங்களது வருவாயை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி மாரியப்பன் வரவேற்றார். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT