பெரம்பலூர் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னையில் விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில் மென்பொருள் நிறுவன ஊழியர் சுபஸ்ரீ மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து, தண்ணீர் லாரி மோதியதில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மாநிலம் முழுவதும் அனுமதி பெறாமலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவிட்டப்பட்டது.
இதையடுத்து பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட புறநகர் பேருந்து நிலைய வளாகம், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, மூன்று சாலை சந்திப்பு, பழைய பேருந்து நிலையம், துறையூர் சாலை, ஆத்தூர் சாலை உள்பட நகரின் பிரதான சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.