விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள்: விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

 பெரம்பலூர் நகரில் சாலை விதிகளை மீறி, அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள்: விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?


 பெரம்பலூர் நகரில் சாலை விதிகளை மீறி, அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 பெரம்பலூரில் புறநகர் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஆட்சியர் அலுவலகம், எளம்பலூர், வடக்குமாதவி, சிறுவாச்சூர், தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட வழித்தடங்களில் 43 ஷேர் ஆட்டோக்கள், 400-க்கும் மேற்பட்ட 3 + 1 ஆட்டோக்கள், இதர வகை ஆட்டோக்கள் என சுமார் 600-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. 
 ஷேர் ஆட்டோக்களில் குறைந்தபட்சம் 5 பயணிகளும், 3 + 1 வகை ஆட்டோக்களில் 3 பயணிகளும், மற்ற வகை ஆட்டோக்களில் சுமார் 8 பயணிகள் வரையிலும் ஏற்றிச் செல்லலாம். ஆனால், நகரில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். 
இது தவிர, சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருக்கும்போது, சாலையோரத்தில் நிற்கும் பயணிகள் நிறுத்துமாறு சைகை செய்தால், பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் திடீரென சாலையின் மையப் பகுதிகளிலேயே ஆட்டோவை நிறுத்துகின்றனர். இதனால், பின்தொடர்ந்து வரும் வாகனங்கள் ஆட்டோவிலோ அல்லது இதர வாகனத்திலோ மோதி அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.
சாலையில் இயக்கத் தகுதியில்லாத சில ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுவதால், கரும்புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் ஆட்டோக்களை பின்தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிக சத்தத்துடன் பாடல்களை எழுப்பியவாறு செல்வதால், பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால், பின்தொடர்ந்து வரும் வாகன ஓட்டிகளால் எழுப்பப்படும் ஹாரன் ஒலிகளை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.
 காற்றில் பறக்கும் போலீஸார் உத்தரவு:  பழைய பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, பெரியார் சிலை வழியாக மோட்டார் சைக்கிள்களை தவிர இதர வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து, அங்கு போக்குவரத்து போலீஸார் மூலம் தடுப்புகளும், எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.  ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அவற்றை ஒதுக்கிவிட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால், அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அண்மைக்காலமாக விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.  
நடவடிக்கை தேவை: வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் ஷேர் ஆட்டோக்களின் தரத்தைப் பரிசோதித்து, இயக்கத் தகுதியில்லாத ஆட்டோக்களைத் தடை செய்ய வேண்டும். மேலும், அனைத்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களையும் அழைத்து அவர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  இதன்மூலம், சாலை விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், பொதுமக்களும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும், அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களையும் ஒழுங்குபடுத்த மாவட்ட காவல் துறையும், போக்குவரத்து போலீஸாரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 
 வாகன தணிக்கையில் பாரபட்சம் கூடாது
 வாகன தணிக்கையில் போலீஸார் பாரபட்சம் காட்டக் கூடாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதுகுறித்து ஜி. ரமேஷ் கூறியது:
 கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தலைக்கவசம் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து வருவது வரவேற்கதக்கது. ஆனால், அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள், போலீஸார் ஆகியோரிடம் பாரபட்சமாக செயல்படுவது கண்டிக்கதக்கது. சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதை கருதி போலீஸார் செயல்பட வேண்டும். பெரம்பலூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களே. 
 கட்டுப்பாடின்றி வாகனங்களை இயக்குகின்றனர். புறநகர் மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட வழியின்றி, அவரவர் விருப்பம் போல் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். இவற்றை போலீஸாரும் கண்டுகொள்வதில்லை. ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். ஆனால், அவர்கள் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதேபோல, சிக்னலையும் மதிப்பதில்லை. நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் தடுக்க சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது பாரபட்சமின்றி போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com