பெரம்பலூர்

பருத்தி சாகுபடியில் உர மேலாண்மை

10th Sep 2019 09:47 AM

ADVERTISEMENT

 கூடுதல் மகசூல் பெற பருத்தி சாகுபடியில் உர மேலாண்மை அவசியம் என்றார் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி மாரியப்பன்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
பருத்தி சாகுபடி முறையில் உரமிடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு சுமார் 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 2 கிலோ பாஸ்போ பாக்டீரியத்தை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து, விதைப்பதற்கு முன் சால்களின் மேல் சீராக தூவ வேண்டும். பிறகு, ஹெக்டேருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட உரத்தை சுமார் 40 கிலோ மணலுடன் கலந்து விதை சால்களில் தூவ வேண்டும்.  
பருத்திக்கு தழை, மணி, சாம்பல் சத்துகள் அதிகளவிலும், சுண்ணாம்பு, மெக்னீசியம், கந்தக சத்துகள் மிதமான அளவிலும், மாங்கனீசு, போரான், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட சத்துகள் மிககுறைந்த அளவிலும் தேவைப்படுகின்றன. இந்த உரங்களை மண் பரிசோதனை செய்து தேவைக்கேற்ப இடுவதே நல்லது.  
அவ்வாறு மண் பரிசோதனை செய்ய இயலாதபோது, தழை, மணி, சாம்பல் சத்துகளை அளிக்க வேண்டும். அதாவது, ரகங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 80 கிலோ தழைச்சத்து, யூரியா 175 கிலோ, 40 கிலோ மணிச்சத்து, சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ, பொட்டாஷ் 65 கிலோ இட வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஹெக்டேருக்கு 120 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.  
யூரியா 260 கிலோ இடுவதன் மூலம் நமக்கு 120 கிலோ தழைச்சத்து கிடைக்கும். மணிச்சத்து 60 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 375 கிலோ இடுவதன் மூலம் நமக்கு 60 கிலோ மணிச்சத்து கிடைக்கிறது. சாம்பல் சத்து 60 கிலோ அதாவது பொட்டாஷ் 100 கிலோ உரமிட்டால் 60 கிலோ சாம்பல் சத்து கிடைக்க வாய்ப்புள்ளது.  
மேற்கூறிய உரங்களை அடியுரமாக பாதி அளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் பாதியளவு சாம்பல் சத்துகளை இட வேண்டும். மீதமுள்ள தழை மற்றும் சாம்பல் சத்துகளை இரண்டு முறை சப்பை பிடிக்கும் பருவம், பூக்கும் பருவத்தில் இட வேண்டும். உரங்களை சரிவர இடாவிட்டால், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சீரியமுறையில் பருத்திக்கான உரங்களை இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT