பெரம்பலூர்

சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

7th Sep 2019 10:14 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று, கட்டாய திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் மணிகண்ட பிரபு (21). இவர், கடந்த ஆண்டு அக். 24ஆம் தேதி, பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றார். தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டார். சில நாள்களில் அந்த சிறுமி மணிகண்டபிரபுவிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய், வி.களத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து மணிகண்டபிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, குற்றவாளி மணிகண்ட பிரபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதையடுத்து போலீஸார் மணிகண்டபிரபுவை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT