பெரம்பலூர்

வருங்கால சந்ததியினர் பயன்பெற நீர் நிலைகளைப் பாதுகாப்போம்

4th Sep 2019 08:47 AM

ADVERTISEMENT

வருங்கால சந்ததியினர் பயன்பெற நீர் நிலைகளைப் பாதுகாப்போம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் மற்றும் மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை இணைந்து, இந்திய அரசின் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் நீர் மேலாண்மை நெறிமுறைகள் குறித்து மாவட்ட அளவிலான விவசாயக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கருத்தரங்கை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் விவசாயத்தை சிறந்த தொழில்நுட்பத்துடன் மேற்கொண்டு, அதிக மகசூல் பெறவேண்டும். எனவே இதற்கு ஆதாரமான மழைநீரை சேமிக்க குளம், குட்டை, ஊருணிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர் வாரி, நல்ல வளமான நீர் ஆதாரங்களை நம் சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர். 
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சக உதவி செயலர் வந்தனா கர்க், தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் துணைத் தலைவர் வி. ஜான் அசோக், புதுடில்லி மத்திய எஃகு துறை அமைச்சக துணைச் செயலர் கே. முரளி, மத்திய மண் மற்றும் பொருள்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி லலித்குமார், திருச்சி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் க. நடராஜன், பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, நீர் மேலாண்மை நெறிமுறைகள் எனும் தலைப்பிலான கையேடுகளை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
தொடர்ந்து, வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியரும், தலைவருமான சு. சிவகுமார், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் செ. சோமசுந்தரம், திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய உதவி இயக்குநர் முனைவர் எஸ். ஞானசம்பந்தன், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் இரா. வசந்தகுமார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். 
விழாவில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.  நீர் சேமிப்பு குறித்த செயல் விளக்கங்களும், கருத்துக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.எ. நேதாஜி மாரியப்பன் வரவேற்றார். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன் நன்றி கூறினார்.

ஆட்சியரிடம் விவசாயி வாக்குவாதம்
கருத்தரங்கில், அண்ணா தொழிலாளர் சங்க நிர்வாகியும், விவசாயியுமான இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், ஆட்சியரிடம்  பனை விவசாயத்துக்கு முக்கியத்தும் அளிக்க தமிழக முதல்வரே உத்தரவிட்டுள்ளார். ஆனால், நீங்கள்(ஆட்சியர்) பனை விவசாயத்துக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. பனை நடவு திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை உங்களிடம் அனுமதி கேட்டு கடிதம் வைத்தபோது, அதற்கு அவசரமில்லை என கிடப்பில் போட்டுள்ளீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதையடுத்து, கருத்தரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT