பெரம்பலூர்

பெரம்பலூர் வழியே ரயில் பாதை அமைக்க ரயில்வே துறை அமைச்சர் உறுதி 

4th Sep 2019 08:47 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் வழியே ரயில் பாதை அமைத்துத் தர ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி அளித்ததாகத் தெரிவித்தார் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாரிவேந்தர்.  
பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர். பாரிவேந்தர், தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாக பெரம்பலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவை சந்தித்தார். சுமார் 40 நிமிடங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடிய பின்னர், செய்தியாளர்களிடம்  அவர் மேலும் கூறியது: 
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து ஆட்சியரிடம் ஆலோசித்தேன். இம்மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். வேலையில்லா திண்டாத்தத்தைப் போக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தேன். நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசின் நீர் மேலாண்மை அமைச்சகத்திடம் பேசி, போதிய நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என ஆட்சியரிடம் தெரிவித்தேன். 
பண்ணைக் குட்டை திட்டத்தின் அருமை, பெருமை விவசாயிகளுக்கு தெரியவில்லை. பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் ஆதரித்து பயன்படுத்திக்கொண்டு நீராதாரத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.  அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும் என மக்களவையிலும், ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலை தனிப்பட்ட முறையிலும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். பெரம்பலூர் வழியே ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். அதுகுறித்து மிக விரைவில் முக்கிய முடிவெடுப்போம் என ரயில்வே அமைச்சர் கடிதம் மூலம் பதில் தெரிவித்துள்ளார் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT