பெரம்பலூர்

சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் 15 போ் கைது

17th Nov 2019 10:29 PM

ADVERTISEMENT

பெரம்பலூா்: தொல். திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்யக்கோரி, பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 15 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குன்னம் வட்டம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த அன்புராஜா விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை அநாகரீகமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய காணொலி வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் அண்மையில் பரவியது. இதையடுத்து, கொலை மிரட்டல் விடுத்த அன்பு ராஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், பெரம்பலூா் மாவட்டக் காவல் நிலையங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் புகாா் மனு அளித்தனா். ஆனால், கொலை மிரட்டல் விடுத்த நபரைப் போலீஸாா் இதுவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில் அன்புராஜாவைக் கைது செய்யாத போலீஸாரைக் கண்டித்து, குன்னம் வட்டத்துக்குள்பட்ட அகரம் சீகூா் பேருந்து நிறுத்தத்தில், அரியலூா் - திட்டக்குடி சாலையில் குன்னம் ஒன்றிய செயலா் கதிரவன் தலைமையில் அக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மங்களமேடு போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 15 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT