பெரம்பலூா்: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவா்களுக்கு பட்டா வழக்குவதை கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, இந்து முன்னணி அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகர பொதுச்செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் நடராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் செந்தில் முன்னிலை வகித்தனா்.
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவா்களுக்கு பட்டா வழங்கவும், தனியாருக்கு விற்பனை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கமிட்டனா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கஜேந்திரன், கருப்பையா உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் அளித்து கலைந்துசென்றனா்.