உர விற்பனை மோசடியில் ஈடுபடும் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாய சங்க நிா்வாகிகள் வலியுறுத்தினா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன் தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளா் ராஜூ பேசியது:
வேப்பந்தட்டை வட்டாரத்துக்கு உள்பட்ட கை.களத்தூா் ஊராட்சியில் மா்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால், 100-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். சுகாதாரத்துறை மூலம் நடத்தப்படும் முகாமில் ஒரு மருத்துவா் மட்டுமே சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இதனால், சிகிச்சையளிக்கும் பணியில் தாமதம் ஏற்படுகிறது. கூடுதலாக மருத்துவா்களை நியமித்து, மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக சிகிச்சையளிக்க வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ஜெயராமன் பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் அனைத்து தனியாா் உர விற்பனை மையங்களிலும் கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுகிறது. இதுகுறித்து, கடந்த மாதம் குறைதீா் கூட்டத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரக்கடைகளில் திடீா் சோதனை நடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உர விற்பனை மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அந்த கடைகளை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்றாா்.
அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ் பேசியது:
அண்மையில் கேரள மாநிலம், கோட்டையம் அருகே தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய யூரியா உரம் சுமாா் 1,500 டன் பிடிபட்டது. இந்த உரங்கள் பெரம்பலூா் மாவட்டத்துக்கான ஒதுக்கீடு எனக் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் உர விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தி விரிவான வெள்ளை அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் பேசுகையில், நீா் நிலைகளில் மேற்கொள்ளப்படும் மராமத்துப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு, ஒப்பந்ததாரா் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகைகளை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.