பெரம்பலூரில் வணிக வரித்துறை மாநில வரி அலுவலர் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சியில் கோட்ட அளவில் செயல்பட்டு வந்த வணிக வரித்துறையைச் சேர்ந்த மாநில வரி அலுவலர் அலுவலகம் பிரிக்கப்பட்டு இதுவரை அரியலூரில் செயல்பட்டு வந்தது. இதனால், பெரம்பலூர் மாவட்ட வணிகர்கள் வரி செலுத்தவும், அதன் விவரங்களை பெறவும் அரியலூர் சென்று வந்தனர். இதனால் கால விரயமும், போக்குவரத்து அலைச்சலும் ஏற்பட்டுவந்தது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்துக்கு வணிக வரித்துறை மாநில வரி அலுவலர் அலுவலகம் திறக்க அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரில் வெள்ளிக்கிழமை அலுவலகம் திறக்கப்பட்டது.
பெரம்பலூர் மாநில வரி அலுவலராக நல்லுசாமி, துணை மாநில வரி அலுவலர்களாக சேகர், லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் சண்முகநாதன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவன இயக்குநர் ஏ.ஆர்.வி. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.