பெரம்பலூர்

பார்க்கிங் வசதியின்றி செயல்படும் வணிக வளாகங்கள்: நகரில் போக்குவரத்து நெரிசல்

31st Jul 2019 10:12 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தாத வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
          பெரம்பலூர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் டயர் தொழிற் சாலை மற்றும் எண்ணற்ற வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தின் மையப் பகுதியாக பெரம்பலூர் அமைந்துள்ளதால், நகருக்குள் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன.  இதைத் தவிர மினி  பேருந்துகள், 500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள், சுமை ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இதனால் பெரம்பலூர் நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக, நகரின் மையப்பகுதியான பழைய பேருந்து நிலையம், என்.எஸ்.பி சாலை, காமராஜர் வளைவு, எளம்பலூர் சாலை, வடக்கு மாதவி சாலை, கடைவீதி, பழைய - புறநகர் பேருந்து நிலைய சாலை ஆகிய பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளாகும். 
பொதுவாக நகரில் வணிக வளாகங்கள் கட்டும்போது, கட்டுமான வரைபடத்தில் வாகனங்களை நிறுத்தும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு நகராட்சி அனுமதி பெற்றுவிடுகின்றனர். ஆனால், பெரும்பாலான வணிக வளாகங்களில் வாகன நிறுத்தும் இடம் என்பது இல்லாமலேயே கட்டுப்பட்டுள்ளன. இதனால், வணிக வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். 
பிரதான சாலைகளின் இருபுறமும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாதசாரிகள் நடக்க வழியில்லாமல் சாலையின் நடுவே செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறுகிய சாலைகள் எனில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  
காவல் துறையினர் கண்டு கொள்ளாததால், எவ்வித அச்சமுமின்றி வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்திவிட்டுச் செல்லும் நிலையை அதிகளவில் காண முடிகிறது. குறிப்பாக, காவல் துறையினரால் வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் எனும் எச்சரிக்கை பதாகை அருகிலேயே சாலை விதிகளை மீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களைக் காணலாம். 
நகராட்சியின் சட்ட விதிமுறையை பின்பற்றாத வணிக வளாகங்கள், ஜவுளி நிறுவனங்கள், சிறு, சிறு கடைகள் ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, பெரம்பலூர் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: 
பெரும்பாலான வணிக வளாகங்களில் நகராட்சி நிர்வாகமும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றனர்.  
இதுதொடர்பாக அரசு அலுவலர்கள் கூறியது: பொதுவாக நகரமைப்பு விதிகளின்படி, 750 சதுர அடியில் கட்டப்படும் கடைகள் பார்க்கிங் வசதிக்கு 70 சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் விதிமுறையின்படி கட்டடங்கள் கட்டப்படவில்லை. 
நகராட்சியிடம் அனுமதி பெற்ற கட்டடங்களில் விதிமுறை மீறி பார்க்கிங் பகுதிகள் அனைத்தும் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT