பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூரில் இரவுநேரங்களில் மது அருந்தும் கூடமாக மாறிவிட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம இளைஞர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த சிவநேசன் உள்ளிட்டோர் அளித்த மனு:
அய்யலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தை, இரவு நேரத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்தும் கூடமாக மாற்றிவிட்டனர். மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே உடைத்து விட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் அளித்த மனுவில்,
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் பணி நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய உத்தரவிட வேண்டும். அரசு அதிகாரி எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றும் போலி நபர்களை அடையாளம் காணவும், லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மீது உரிய அடையாளத்துடன் புகார் அளிக்கவும் அடையாள அட்டை அணிவது அவசியம் எனக் கருதுகிறோம்.
எனவே, பணி நேரத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் அடையாள அட்டை அணிவதை கட்டாயமாக்கி உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.