பெரம்பலூர்

வெங்கலத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான  மருத்துவ முகாம்

29th Jul 2019 10:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்  வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைச் சிசிச்சை தேவைப்படுவோரைக் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி, பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை  (ஜூலை 29) நடைபெறுகிறது.
 முகாமில் எலும்பு முறிவு, மனநலம், காது, மூக்கு தொண்டை, கண் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் பங்கேற்று, தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து தேர்வு செய்ய உள்ளனர்.  
எனவே, தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஊனம் தெரியும்படியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 4 ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT