பெரம்பலூர்

மின் வாரிய உதவியாளர், கம்பியாளர் கா−ப்பணியிடங்கள் நிரப்பப்படுமா?

27th Jul 2019 08:50 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்ட மின்வாரியத்தில் காலியாக உள்ள உதவியாளர், கம்பியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், கூடுதல் பணிச் சுமையால் மின் வாரிய ஊழியர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
மின் வாரியத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், உதவியாளர்கள், கம்பியாளர், போர்மேன், மின் பாதை ஆய்வாளர் என தொடக்க நிலைகளில் பல்வேறு பணியாளர்கள்   கிராமம் முதல் நகரம் வரை மின் கம்பங்களை நடுவது, இணைப்புக் கொடுப்பது, மின் மாற்றியில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களால் தற்போது பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு கூடுதலாக கடும் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
 2005 ஆம் ஆண்டில் மின் வாரியத்தில் மஸ்தூர் தொழிலாளர்கள் காலமுறை ஊதியத்தில் சேர்க்கப்பட்டனர். பணியில் சேர்ந்தபோது அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2 ஆண்டுகளில் அனைவரும் உதவியாளர்களாக  உயர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை யாருக்கும் அந்த நிலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
 தற்போது சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர், கம்பியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணி ஓய்வு, பணியின் போது தொழிலாளர் உயிரிழந்தது என்பன உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்களும் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளதாக மின் வாரியத் தொழில் சங்கத்தினர் தெரிவித்தனர். 
 பெரம்பலூர் மாவட்ட மின் வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்துக்குள்பட்ட 252 கிராம மக்களின் தேவைக்காகவும், புகார் அளிக்கவும் 25 பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 504 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் 41 கம்பியாளர்களும், 78 உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 
இந்தக் காலிப் பணியிடங்களால் மின் கம்பிகளைச் சீரமைப்பது, மின் கம்பங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் கூறியது:
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மின் நுகர்வோர் அளிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது. சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சீரமைக்க வேண்டுமானாலும், புகார் அளித்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்யும் வகையில், பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 6 ஆம் தேதி தானியங்கி புகார் பதிவு செய்யும் மையம் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால் மின் பிரச்னைகளை உரிய நேரத்தில் சரி செய்யவது என்பது இயலாத செயலாகும். 
கடந்த 2 மாதத்துக்கு முன்பு வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட தழுதாழை, அரும்பாவூர், அ.மேட்டூர், மலையாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சூறாவளி காற்றால் பல மின் கம்பங்கள் சாய்ந்து, மின் வயர்கள் தொங்கியவாறு உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், மின் நுகர்வோர் கூட்டங்களில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அவர். 
மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் எஸ். அகஸ்டின் கூறியது: 
தமிழகம் முழுவதும் 24,405 பணியிடங்கள் காலியாக உள்ளது.  ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்ய வேண்டும். ஆனால், பணியில் இருக்கும் வயர்மேன் உள்ளிட்டவர்களை அனுப்புவதால், பழுதான மின் மாற்றிகள், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை, மின் தடைகளை கவனிக்க முடியவில்லை.
 ஒப்பந்த முறையில் செய்ய வேண்டிய பணிகளை நிரந்தரப் பணியாளர்களைக்கொண்டு செய்யப்படுவதால், அன்றாடப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன.   
பணியாளர்கள் பற்றாக்குறையால் மின் விபத்துகளும், வேலைப் பளு கடுமையாக அதிகரித்துள்ளது. வேலைப்பளு ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்ட பணியிடங்களையும் நிரப்பவில்லை என்றார் அவர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT