பெரம்பலூர்

வங்கிக் கடனை ரத்து செய்யக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் மனு

16th Jul 2019 09:23 AM

ADVERTISEMENT

வங்கிக் கடனை ரத்து செய்யக் கோரி, கோழிப்பண்ணை விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
பெரம்பலூரில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனு:  
பெரம்பலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழக அரசின் கறிக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்று கோழிப்பண்ணைத் தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு, மத்திய அரசின் நபார்டு மானியம் இன்னும் வழங்கப்படவில்லை. 
ஒப்பந்த பண்ணை நிர்வாகம் முறையாக கோழிக் குஞ்சுகள் வழங்குவதில்லை. இதனால், கோழி உற்பத்தி செய்ய முடியாமல் பண்ணைகள் செயலற்றுக் கிடப்பதால், வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த நெருக்கடி தருகின்றன. 
இதனால் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். எனவே, மாவட்ட ஆட்சியர் வங்கிக் கடனை ரத்து செய்து, கோழிப்பண்ணை தொழில் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடிக்கணினி கோரி மனு: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,  பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள்  மாணவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: 
கடந்த 2017- 2018 ஆம் ஆண்டில் கல்வி பயின்ற 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, விலையில்லா மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.  
மொத்தம் 265 கோரிக்கை மனுக்கள்:
பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 265 மனுக்கள் வழங்கப்பட்டன. அவற்றின் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்து, மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், தொழிலாளர் உதவி ஆணையர் முகமது யூசுப், முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் சடையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT