எச்.ஐ.வி பாதித்த மாணவனுக்கு அரசுப் பள்ளியில் இடமளிக்க மறுத்தது தொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரது 15 வயது மகனுக்கு கொளக்காநத்தம் அரசுப் பள்ளியில், எச்.ஐ.வி பாதிப்பை காரணம் காட்டி, 10 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள தலைமை ஆசிரியர் காமராஜ் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவன், கடந்த 10 ஆம் தேதி தனது உறவினர்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் புகார் மனு அளித்து, தன்னை பள்ளியில் சேர்க்க உத்தரவிடுமாறு வலியுறுத்தினார். இதுதொடர்பாக, நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.
ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து, இப்பிரச்னை குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, முதன்மை கல்வி அலுவலர் கு. அருளரங்கன் ஆகியோர் 4 வாரங்களில் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.