இளைய தலைமுறையினர் தன்மான உணர்வோடு கடமையாற்ற வேண்டும் என்றார் திருச்சிராப்பள்ளி உருமு தனலட்சுமி கல்லூரியின் முதல்வர் முனைவர் இ.ஆர். ரவிச்சந்திரன்.
பெரம்பலூரில் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவிதை அரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
கவிதைகள் மனிதம் பாட வேண்டும். நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திட வேண்டும். இளைய தலைமுறையினர் தன்மான உணர்வோடு கடமையாற்ற வேண்டும். மொழி, இனம் நமது கண்கள் போன்றன. இளைஞர் இவற்றைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும். கவிதைகள் மனித இதயங்களைப் பக்குவப்படுத்தி, வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன் பேசியது:
திருக்குறள் இன்று உலகம் முழுவதிலும் கோலோச்சுகிறது. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் இன்று படைப்பாளர்களின் ஜீவ ஊற்றாக அமைந்துள்ளன. பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசனும், வாணிதாசனும் தமிழைக் கவிதையால் கடைந்தெடுத்தனர். இன்றைய இளம் கவிஞர்கள் சிகரம் நோக்கிய நீண்ட கவிதைப் பயணம் மேற்கொண்டுள்ளனர். மொழி, நாடு, சமூகம், மானுடம் என கவிதைகள் மனித இதயங்களைப் பண்படுத்துகின்றன. தளர்வுகளில் தன்னம்பிக்கைத் தருகின்றன. சோர்வில் ஒத்தடம் தருகின்றன. மானுட வாழ்விற்கு வலு சேர்க்கின்றன என்றார் அவர்.
அண்ணாமலைப் பல்கலை. தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெனிட்டா செளந்தரி ரோச் முன்னிலை வகித்தார். வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் து. சேகர், திருச்சிராப்பள்ளி உருமு தனலட்சுமி கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ. கருணாநிதி, தமிழாசிரியர் ராமானுஜம் ஆகியோர் காலம்தோறும் தமிழ்க் கவிதைகள் எனும் தலைப்பில் பேசினர்.
கவிஞர் புவனேசுவரி வரவேற்றார். தமிழாசிரியர் வசந்த மல்லிகா நன்றி கூறினார்.