பெரம்பலூர்

அய்யலூர் ஸ்ரீ அருணாசலேசுவரர் கோயில் குடமுழுக்கு

12th Jul 2019 07:12 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தில் மகா மாரியம்மன், ஸ்ரீ உண்ணாமலை அம்மன் உடனுறை அருணாசலேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் கிராமத்தில் மகா மாரியம்மன், ஸ்ரீ உண்ணாமலை உடனுறை அருணாசலேசுவரர் மற்றும் ஸ்ரீதேவி - பூதேவி வரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் குடமுழுக்கு விழாவையொட்டி, ஜூலை 9 ஆம் தேதி கணபதி பூஜை, அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகளோடு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து, ஜூலை 10 ஆம் தேதி கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகளும், வியாழக்கிழமை காலை திரவ்யாஹூதியும், மஹா பூர்ணாஹூதியோடு 3 ஆம் கால யாக வேள்வி நடைபெற்றது.
இதையடுத்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோபுர விமானங்களுக்கு வந்தடைந்தது. தொடர்ந்து விநாயகர், வரதராஜப்பெருமாள், மகா மாரியம்மன், ஸ்ரீ உண்ணாமலை உடனுறை அருணாசலேசுவரர் உள்ளிட்ட சந்நிதிகளின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், மூலவர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. விழாவில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT