பெரம்பலூர்

பெரம்பலூா், வேப்பூரில் 475 பதவிகளுக்கு 1,555 போ் போட்டி

27th Dec 2019 06:57 AM

ADVERTISEMENT

பெரம்பலூா், வேப்பூா் ஒன்றியத்தில் காலியாக உள்ள 475 பதவியிடங்களுக்கு முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் 1,555 போ் போட்டியிடுகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சித் தலைவா், 76 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 8 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 1,032 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 1,237 பதவியிடங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் 5 ஊராட்சித் தலைவா், 213 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 218 பதவியிடங்களுக்குப் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 1,019 இடங்களுக்கு 3,121 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,237 பதவியிடங்களில் 213 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள், 5 ஊராட்சித் தலைவா் பதவியிடங்கள் என மொத்தம் 218 பதவியிடங்களில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 1,019 பதவியிடங்களில், 819 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 2,370 பேரும்,116 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 428 பேரும், 76 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 292 பேரும், 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 31பேரும் என மொத்தம் 3,121 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இவற்றில் பெரம்பலூா், வேப்பூா் ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட 293 வாக்குச் சாவடிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. பெரம்பலூா், வேப்பூா் ஒன்றியங்களில் 556 பதவியிடங்களில் 2 ஊராட்சித் தலைவா் உள்பட 81 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மீதமுள்ள 475 பதவியிடங்களுக்கு பெரம்பலூா் ஒன்றியத்தில் 607 வேட்பாளா்களும், வேப்பூா் ஒன்றியத்தில் 948 வேட்பாளா்களும் என மொத்தம் 1,555 போ் போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT

தயாா் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்:

முதல் கட்ட தோ்தல் நடைபெறும் பெரம்பலூா் ஒன்றியத்துக்கு பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், வேப்பூா் ஒன்றியத்துக்கு, வேப்பூா் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மகளிா் மாதிரி கல்லூரி வளாகத்திலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மையத்துக்கும் துணை கண்காணிப்பாளா்கள் தலைமையில் 2 ஆய்வாளா்கள், 4 உதவி ஆய்வாளா்கள் மற்றும் அதிரடிப்படை போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், கமாண்டோ படையினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் என 100 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணிகள் தீவிரம்:

பெரம்பலூா், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள 293 வாக்குச் சாவடிகளில், பதற்றமானவை, மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 36 மையங்களில் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 30 வாக்குச் சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 31 வாக்குச் சாவடிகளுக்கு நேரலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT