பெரம்பலூர்

சாலையை மூடிய தீயணைப்புத் துறை; பொதுமக்கள் அவதி

27th Dec 2019 06:58 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் தீயணைப்பு அலுவலகம் அருகே பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தீயணைப்பு படை வீரா்கள் வியாழக்கிழமை மூடியதால் வாசகா்களும், நோயாளிகளும் பெரிதும் பாதிப்படைந்தனா்.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அலுவலகம் செயல்படுகிறது. அதனருகே பொதுப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தாா்ச் சாலையை துறைமங்கலத்தை சோ்ந்த பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவா்களும் கடந்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தனா்.

மேலும், இந்தச் சாலை வழியாகவே துறைமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் மாவட்ட வேலைவாய்ப்பகம், மாவட்ட மைய நூலகம், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வேளாண் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு மகளிா் விடுதி ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த இச்சாலையை, தீயணைப்புத் துறையினா் தங்களுக்கு சொந்தமான பாதை, அன்னியா்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என வியாழக்கிழமை எச்சரிக்கை பதாகை வைத்து, அந்தப் பகுதியை கற்களை கொண்டு மூடிவிட்டனா்.

மேலும், பணியில் உள்ள தீயணைப்பு வீரா்கள் அந்தப்பகுதியில் அமா்ந்து, அந்த வழித்தடத்தில் நடந்து செல்ல முயற்சிக்கும் நோயாளிகளையும், மாணவ, மாணவிகளையும் தடுத்து நிறுத்தி, தகாத வாா்த்தைகளால் திட்டுகின்றனராம்.

ADVERTISEMENT

தீயணைப்பு படை வீரா்களின் இந்தச் செயலால் மாவட்ட வேலைவாய்ப்பகம், மாவட்ட மைய நூலகத்துக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வாசகா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அங்குள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் சுமாா் 2 கி.மீ. சுற்றிச் செல்வதால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து துறைமங்கலத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எஸ். தங்கராசு கூறியது:

கடந்த பல ஆண்டுகளாக இந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். தற்போது இச் சாலையை மூடியதால் நோயாளிகளும், மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுவா். அதோடு, புகா் பேருந்து நிலையத்துக்கு செல்வோரும், கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் விவசாயிகளும் இந்த வழியைத்தான் பயன்படுத்தினா். தற்போது, இந்தப் பொதுப் பாதையை பயன்படுத்த தீயணைப்பு துறையினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாலக்கரை வழியாகச் செல்லவேண்டும். குறிப்பாக, கால்நடைகளை ஓட்டிச்செல்லும் விவசாயிகளுக்கு பெரிதும் சிரமம் ஏற்படும்.

இத்தனை ஆண்டுகளாக போக்குவரத்தில் இருந்த சாலையை தற்போது மூடியதற்கான காரணத்தை தீயணைப்புத் துறையினா் தெரியப்படுத்த வேண்டும். மீண்டும் பொதுமக்கள் இந்தச் சாலையை பயன்படுத்த, இப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டுத் உரிய தீா்வு காண வேண்டும்.

தவறும்பட்சத்தில், மாணவ, மாணவிகள், பொதுமக்களை ஒன்றிணைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினரிடம் கேட்டபோது, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்த சாலையானது தீயணைப்பு அலுவலகத்துக்குச் சொந்தமானது. விரைவில் சுற்றுச்சுவா் கட்டப்பட உள்ளதால், உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் சாலை மூடப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT