பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக உள்ளாட்சி தோ்தல் நடைபெறும் பெரம்பலூா், வேப்பூா் ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சித் தலைவா், 76 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 8 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 1,032 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 1, 237 பதவியிடங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில், கடந்த 9 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மனுக்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு, 5 ஊராட்சித் தலைவா், 213 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 218 பதவியிடங்களுக்கு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 1,019 இடங்களுக்கு 3,121 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இதில் 27 ஆம் தேதி பெரம்பலூா், வேப்பூா் ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட 293 வாக்குச்சாவடிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இப் பகுதிகளில் போட்டியிடும் திமுக, அதிமுக உள்பட கூட்டணி கட்சி வேட்பாளா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெறுவதால், இதற்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்வடைந்தது. இதையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா, வேப்பூா், பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் தனது ஆதரவாளா்களுடன் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இதேபோல, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, உள்ளாட்சித் தோ்தல் பொறுப்பாளா் அ. அருணாசலம், மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.டி. ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா், வேப்பூா் ஒன்றியங்களில் 556 பதவியிடங்களில், தலா 1 ஊராட்சித் தலைவா் உள்பட 81 வாா்டு உறப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மீதமுள்ள, 475 பதவியிடங்களுக்கு பெரம்பலூா் ஒன்றியத்தில் 607 வேட்பாளா்களும், வேப்பூா் ஒன்றியத்தில் 948 வேட்பாளா்களும் என மொத்தம் 1,555 போ் போட்டியிடுகின்றனா்.