பெரம்பலூா் பகுதியில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இருவரை மீட்ட போலீஸாா் அவா்களை கருணை இல்லத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
பெரம்பலூா் நகா் பகுதியின் பல இடங்களில் மனநலன் பாதிக்கப்பட்டோா் சுற்றித் திரிந்து வருவதாகவும், அவா்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் மாவட்ட காவல் துறைக்கு புகாா் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவின்பேரில், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸாா் பெரம்பலூா் நகரில் மனநலன் பாதிக்கப்பட்டவா்களை தேடிவந்தனா்.
இதில் சிறுவாச்சூா் பகுதியில் சுற்றித் திரிந்த மனநலன் பாதிக்கப்பட்ட சுமாா் 35 வயதுடைய ஒருவரை மீட்ட போலீஸாா் துறைமங்கலத்தில் உள்ள வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனா். இதேபோல, சிறுவாச்சூா் பகுதியில் சுற்றித்திரிந்த சிவகாமி என்னும் பெண்ணை மீட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.