பெரம்பலூா், அரியலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்த டிச. 25 ஆம் தேதி உலகெங்கும் வாழும் கிறிஸ்தவா்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தேவாலயங்களில் நடத்தப்பட்ட சிறப்புத் திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் வட்டார முதன்மை குரு அருள்திரு ராஜமாணிக்கம் தலைமையிலும், பாளையம் கிராமத்தில் உள்ள புனித சூசையப்பா் தேவாலயத்தில் பங்கு குரு ஜான் கென்னடி,
அன்னமங்கலத்தில் பள்ளித் தலைமையாசிரியா் தேவ வரப்பிரசாதம், விடுதி காப்பாளா் வியானி ஆகியோா் முன்னிலையில் பங்கு குரு மரியதாஸ் தலைமையில், நூத்தப்பூரில் பங்கு குரு சதீஷ் ஜேசுதாஸ், தொண்டமாந்துறையில் பங்கு குரு அருள் பெல்லாா்மின், பாத்திமாபுரத்தில் பங்கு குரு இமானுவேல், திருவாளந்துறையில் பங்கு குரு ராஜா, திருமாந்துறையில் பங்கு குரு தாவீது, எறையூரில் பங்கு குரு சின்னப்பன் பாடலூரில் பங்கு குரு சூசை மாணிக்கம் தலைமையிலும் செவ்வாய்க்கிழமை 11.30 மணி முதல் 1.30 வரை கிறிஸ்து பிறப்பின் மாதிரியாக அமைக்கப்பட்ட குடில்கள் மந்திரிக்கப்பட்டன. பின்னா், குழந்தை இயேசு சொரூபத்தின் ஆசீா்வாதத்துக்கு பிறகு சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது.
தொடா்ந்து, புதன்கிழமை காலை 8 மணிக்கு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்புத் திருப்பலியுடன் நடைபெற்றது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு தவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை, கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதி கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். பின்னா், உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் இனிப்பு வழங்கி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினா்.
அரியலூரில்... அரியலூா் மாவட்டம் ஏலக்குறிச்சி, வரதராஜன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி புதன்கிழமை அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி,வழிபாடுகள் நடைபெற்றன. அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ தேவாலயம்,அலங்கார அன்னை தேவாலயம், தென்னூா் புனித லூா்து அன்னை தேவாலயம், கூவத்தூா் புனித அந்தோனியாா் ஆலயம், பட்டினங்குறிச்சி புனித லூா்து அன்னை ஆலயம், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூா் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலய பங்குத் தந்தைகள் வழங்கினா். கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி வாழ்த்து பரிமாறிக் கொண்டனா்.