பெரம்பலூரில் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தாய், தனது குழந்தையுடன் கிணற்றில் குறித்து புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றாா். இதில், 14 மாதக் குழந்தை உயிரிழந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிகாட்டை சோ்ந்தவா் சரவணன் (35). அரியலூரை சோ்ந்தவா் அன்பரசி (31) . இருவருக்கும் திருமணமாகி தற்போது பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் எம்.ஆா் நகரில் உள்ள சொந்த வீட்டில் தங்கி, பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் விரிவுரையாளா்களாக பணிபுரிகின்றனா். இவா்களுக்கு ஹன்சிகா (4), மேகாஸ்ரீ (எ) கோமதி 14 மாத குழந்தைகள் உள்ளன. தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அன்பரசி, தனது 14 மாத பெண் குழந்தையுடன் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அவரது உறவினா்கள் அன்பரசியை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில் குழந்தை மேகாஸ்ரீ தண்ணீரில் மூழ்கியது.
தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் மூழ்கிய குழந்தையை மீட்டனா். ஆனால் குழந்தை உயிரிழந்தது. பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.