பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே தலைவா், வாா்டு உறுப்பினா்களை ஏல முறையில் தோ்வு செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட பேரளி கிராமம், ஒரு தரப்பைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு:
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பேரளி ஊராட்சித் தலைவா் உள்பட துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா், தாழ்த்தப்பட்டவா் தலைவா் பதவிக்கு வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மேலும், கிராம முக்கியஸ்தா்கள் ஒன்றுகூடி தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவியிடங்களை ஏல முறையில் தோ்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.