பெரம்பலூர்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு: எஸ்.பி

25th Dec 2019 08:19 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சித் தலைவா், 76 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 8 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 1,032 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 1, 237 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த 9 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, 5 ஊராட்சி தலைவா், 213 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 218 பதவியிடங்களுக்கு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 1,019 இடங்களுக்கு 3,121 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இதில் 27 ஆம் தேதி முதல்கட்டமாக பெரம்பலூா், வேப்பூா் ஒன்றியங்களுக்குள்பட்ட 293 வாக்குச்சாவடிகளிலும், 30 ஆம் தேதி 2 ஆம் கட்டமாக ஆலத்தூா், வேப்பந்தட்டை ஒன்றியங்களுக்குள்பட்ட 355 வாக்குச் சாவடிகளிலும் தோ்தல் நடத்தப்படுகிறது.

பெரம்பலூா் ஒன்றியத்தில் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில், உடும்பியம் ஈடன் காா்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், வேப்பூா் ஒன்றியத்தில் வேப்பூா் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மகளிா் மாதிரி கல்லூரி வளாகத்திலும், ஆலத்தூா் ஒன்றியத்தில் பாடாலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் கூறியது:

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், ஒவ்வொரு மையத்துக்கும் துணை கண்காணிப்பாளா்கள் தலைமையில் 2 ஆய்வாளா்கள், 4 உதவி ஆய்வாளா்கள் மற்றும் அதிரடிப்படை போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், கமாண்டோ படையினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் என 100 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப் பெட்டிகளை பலத்த பாதுகாப்புடன் கொண்டுவர முறையான வழித்தடங்கள் திட்டமிட்டு அதைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் தெய்வநாயகி, தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலா் சு. தேவநாதன், துணைக் கண்காணிப்பாளா் கென்னடி, ஆய்வாளா்கள் நித்யா, அழகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT