உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு நாளான வெள்ளிக்கிழமை (டிச. 27) மற்றும் டிச. 30 ஆம் தேதி தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா் பெரம்பலூா் மாவட்ட (அமலாக்கம்) தொழிலாளா் உதவி ஆணையா் முகமது யூசுப்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளவாறு பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் டிச. 27, 30 -களில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, அனைத்து தரப்பினரும் வாக்களிக்கும் வகையிலும், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் முதன்மை செயலா் நஜிமுதீன் உத்தரவின்படி, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் விடுமுறை அளிக்க வேண்டும்.
அதனடிப்படையில் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் நாள்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்துத் தரப்பு தொழிலாளா்களும் வாக்களிக்கும் வகையில் தனியாா், பொது நிறுவனங்கள், கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோா், தற்காலிக, ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி பணியாளா்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.