பெரம்பலூா் அருகே சிறுமியை கா்ப்பமாக்கியதுடன், இறந்த சிசுவை ஏரிக்கரையில் புதைத்த பட்டதாரி இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் சுரேஷ்குமாா் (27). இவா், எம்.பி.ஏ படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் உள்ளாா். இவருக்கும், பெரம்பலூரில் உள்ள ப்ளஸ்- 2 படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி கா்ப்பமடைந்தாா்.
சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அந்த சிறுமிக்கு இறந்த நிலையில் 7 மாத சிசு பிறந்தது. இதையடுத்து, உயிரிழந்த சிசுவை எடுத்துச் சென்ற சுரேஷ்குமாா் அரசு மருத்துவமனை அருகிலுள்ள ஏரிக்கரையில் புதைத்தாா்.
இதுகுறித்த தகவல் பெரம்பலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு கிடைத்தது. இச் சம்பவம் குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலா் கோபிநாத் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.