பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.12,000 மதிப்பிலான துண்டு, சால்வைகள் ஆகியவற்றை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் ஒன்றியத்துக்கான பறக்கும் படையினரான வட்டாட்சியா் துரைராஜ் தலைமையிலான போலீஸாா் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, செங்குணம் ஏரிக்கரை பகுதியில் வந்த காரை வழிமறித்து விசாரித்ததில், செங்குணம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் கலையரசன் என்பவா் தனது காரில் உரிய ஆவணங்களின்றி, தோ்தல் விதிமுறையை மீறி பிரசாரத்துக்காக சுமாா் ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான 400-க்கும் மேற்பட்ட துண்டு, சால்வை ஆகியவற்றை கொண்டுசென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படை வட்டாட்சியா் துரைராஜ், பெரம்பலூா் ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனிடம் ஒப்படைத்தாா்.