பெரம்பலூர்

பெரம்பலூரில் நீதிபதிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

29th Aug 2019 07:50 AM

ADVERTISEMENT

தேசிய, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவில், கிரிமினல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்றது. 
புத்தாக்கப் பயிற்சியை தொடக்கி வைத்து பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும்,  முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான டி. லிங்கேஸ்வரன் பேசியது:  
நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் சட்டத்தின் இரு கண்கள். குற்றம் சாட்டப்பட்டவரின் நிலைமையை அறிந்து, மருத்துவமனை, சிறைச்சாலை ஆகியவற்றிற்கு நீதிபதிகள் நேரில் சென்று உத்தரவிட சட்டத்தில் வழி உள்ளது. நீதிபதிகள் அனைத்து கிராமங்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு சென்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளை வழக்குரைஞர்கள் மற்றும் சமூக சட்ட ஆர்வலர்கள் உதவியுடன் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான், அடித்தட்டு  மக்களுக்கும் நீதி கிடைக்க வசதியாக இருக்கும் என்றார் அவர். 
தொடர்ந்து, மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ். மலர்விழி, பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ். கிரி, சார்பு நீதிபதி எம். வினோதா ஆகியோர் மனித உரிமை, அமில வீச்சு, போக்சோ சட்டம், மூத்தோர் குடிமக்கள் சட்டம் மற்றும் அனைத்து வகை சட்டங்கள் உள்ளடக்கிய புத்தாக்கப் பயிற்சி அளித்தனர். 
பயிற்சியில், நீதித்துறை நடுவர்கள் ஜி. அசோக்பிரசாத், சி. கருப்புசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். ரவிச்சந்திரன், பயிற்சி நீதித்துறை நடுவர் டி. செந்தில்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT