பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு மதுபானக் கடைகள் மூலம் பொதுமக்களும், அதில் பணிபுரியும் ஊழியர்களும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள், ஊழியர்கள், பார் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் மாதம்தோறும் 2, 4-வது செவ்வாய்க்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குறைதீர் தீர் கூட்டம் நடத்த டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மண்டல மேலாளர் ராமச்சந்திரன் பேசியது:
பொதுமக்கள், ஊழியர்கள், பார் உரிமையாளர்களின் கோரிக்கை மனுக்களை பட்டியலிட்டு, தனி பதிவேட்டில் விவரங்கள் பதிய செய்யப்படும். இம்மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.
எனவே, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர்கள், பார் ஒப்பந்தகாரர்கள் தங்களது குறைகளை குறைதீர் கூட்டத்தில் மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றார் அவர். கூட்டத்தில் உதவி மேலாளர்கள் சீனிவாசன் (கிடங்கு), தமிழரசன் (சில்லரை வணிகம்), உதவி கணக்கர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.