பெண்களின் முன்னேற்றத்துக்காக சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
சமூக நலத்துறையின் சார்பில் "பெண் குழந்தை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
இக் கருத்தரங்குக்கு தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது: பெண் குழந்தைகளின் பாதுகாப்பிலும், கல்வி மேம்பாட்டிலும் ஒவ்வொருவரும் தங்களுக்குண்டான கடமையை செயல்படுத்த முன் வரவேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்னும் அடிப்படையில், சமுதாய மாற்றத்துக்காகவும், பெண்களின் பாதுகாப்புக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் ஊடகத் துறையினர் முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும். விழிப்புணர்வு மூலமாக குழந்தைகள் சினிமாவுக்கும், வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொண்டு, தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் ஆட்சியர் சாந்தா.
சேலம் மாவட்ட மகளிர் நல அலுவலரும், பயிற்சியாளருமான கோகிலா பேசியது:
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அவர்களது முன்னேற்றம் குறித்த தகவல்களின் அடிப்படையில் பெரம்பலூர் உள்பட 11 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுகாதாரம், கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை மற்றும் செய்தித்துறை உள்ளிட்ட 7 துறைகளை உள்ளடக்கி இத்திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
இக்கருத்தரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், சமூக நல அலுவலர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.