தங்களுக்குச் சொந்தமான வாடகை வீட்டை மீட்டுத்தரக் கோரி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் தனலட்சுமி (30), இவரது கணவர் வேல்முருகன் கடந்த 4 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர் அதே பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குழந்தைகள் ராஜமுருகன் (9), ஷோபனா (11), மாமியார் நாகம்மாள்(80) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டை கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கடந்த 20 ஆண்டுக்கு முன் வாடகைக்கு விட்டுள்ளாராம். இந்நிலையில், தனலட்சுமி வாடகைக்கு இருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் வீட்டை காலி செய்துகொடுக்குமாறு கூறியதற்கு, அந்த வீடு தனக்குச் சொந்தமானது எனக்கூறி காலி செய்ய மறுத்து பிரச்னை செய்து வருகிறாராம். இதுகுறித்து கை.களத்தூர் போலீஸார், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், கடந்த ஆக. 23 ஆம் தேதி வாடகைக்கு விட்டிருந்த வீட்டுக்கு குழந்தைகள் மற்றும் சில தளவாடப் பொருள்களுடன் சென்று தனலட்சுமி குடியேறியுள்ளார்.
வீட்டிலிருந்த கிருஷ்ணமூர்த்தி அந்தப் பொருள்களை எடுத்து வெளியே வீசிவிட்டு, தனலட்சுமியையும், அவரது குழந்தைகளையும் தாக்கி, வீட்டைவிட்டு வெளியேற்றியதாகத் தெரிகிறது. இதுகுறித்து கை.களத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் விரக்தியடைந்த தனலட்சுமி, தனது குழந்தைகள் ஷோபனா, ராஜமுருகன், மாமியார் நாகம்மாள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். அங்கு, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்தார். இதையறிந்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.