நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்கு ஆஜரான, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வழக்குரைஞரை எச்சரித்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. லிங்கேஸ்வரன்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (61). இவர், பணியின்போது வழக்குரைஞர்கள் நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு- பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்குரைஞர் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பார் கவுன்சில் உத்தரவை மீறி பாலசுப்பிரமணியன் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பாக ஆஜராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி, சேலம் ஆகிய நீதிமன்றங்கள் பாலசுப்பிரமணியனை எச்சரித்து அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமை வந்தபோது, அவர் மீது சந்தேகமடைந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. லிங்கேஸ்வரன், அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, பார் கவுன்சில் பணியிடை நீக்கம் செய்ததை மீறி பாலசுப்பிரமணியன் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் மாலை வரை காத்திருக்க வைத்தார் நீதிபதி. பின்னர், வயதில் மூத்தவர் என்னும் காரணத்துக்காக உங்களை எச்சரித்து, மன்னித்து விடுவிக்கிறேன். இனிமேல் பார் கவுன்சில் உத்தரவை மீறி நீதிமன்றங்களில் வழக்குரைஞராக ஆஜராகக் கூடாது. எனவே, நீங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திவிட்டு போகலாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, 4 பக்கத்துக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு சென்றார் வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன்.