பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் கோழி அபிவிருத்தித் திட்டத்தில் பயன்பெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் புறக்கடை கோழி வளர்க்க பெண்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு கோழிப் பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கோழி அபிவிருத்தி திட்டத்தை 2019- 2020 ஆம் ஆண்டுக்கு செயல்படுத்த உள்ளது. 100 சதவீதம் அரசு மானியத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு 500 பெண் பயனாளிகள் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியத்துக்கும் 2 ஆயிரம் பயனாளிகளும், 4 பேரூராட்சிக்கும் 482 பயனாளிகளும் என மொத்தம் 2,482 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய இலவச அசில் இன 25 நாட்டுக் கோழிகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற பெண் பயனாளிகள் மட்டுமே தகுதியுடையவர்கள். தமிழ் மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கண்டறியப்பட்ட ஏழைகளின் பட்டியல் உள்ள பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். விதவைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்ய வேண்டும்.
பேரூராட்சிகளில் பெண் பயனாளிகள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்கவேண்டும். தகுதியுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்.