பெரம்பலூர்

பெரம்பலூரில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

23rd Aug 2019 09:38 AM

ADVERTISEMENT

மழைநீர் வடிகால் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பெரம்பலூர் சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூரில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையின் போது, நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள சிலோன் காலனியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயை சிலர் அடைத்துவிட்டதால், மழை நீர் வெளியேற வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வந்த பெரம்பலூர் வட்டாட்சியர், நகராட்சி ஆணையரிடம் கால்வாயை சீரமைத்து, முறையாக மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிலோன் காலனி மக்கள் புகார் தெரிவித்தனராம்.
ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையில் இப்பகுதியில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் குளம்போல் காட்சியளித்தது. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மீண்டும் புகார் மனு அளித்தனர். இருப்பினும், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த சிலோன் காலனி பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மழைநீர் வெளியேற கால்வாயில் உள்ள அடைப்புகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, மழையால் பாதிப்பு அதிகரிக்கும் முன்பே வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி நகராட்சி அலுவலர்களிடம் மனு அளித்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT