பெரம்பலூர்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

11th Aug 2019 04:46 AM

ADVERTISEMENT


பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவிகளை கல்லூரி தாளாளர் எம். சிவசுப்ரமணியம் சனிக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினர். 
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பெரம்பலூர் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேச்சுப் போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பெற்ற ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவி ரெ. புஷ்பலதாவுக்கு, சான்றிதழும், ரூ. 7 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. 
இதேபோல, 3ஆம் இடம் பெற்ற, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பயிலும் 2ஆம் ஆண்டு மாணவி வி. சூரியதர்ஷினிக்கு, சான்றிதழும், ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் எம். சிவசுப்ரமணியம், செயலர் எம்.எஸ். விவேகானந்தன் ஆகியோர் பாராட்டினர். 
இந்நிகழ்ச்சியின்போது, ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி முதல்வர் எம். சுபலெட்சுமி, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் பத்மலால் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT