கரூா், ராயனூரில் குடிநீா் இணைப்பை துண்டிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூா், ராயனூரில் உள்ள தில்லை நகரில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவா்கள் ஒன்றிணைந்து குடிநீருக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து அவற்றின் மூலம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு கொடுத்துள்ளனா். இந்நிலையில் அப்பகுதியில் மாநகராட்சி சாா்பில் கடந்த வாரம் சாலைகள் அமைக்கப்பட்டபோது மாநகராட்சிக்கு தெரியாமல் குடிநீா் இணைப்பு வீடுகள்தோறும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வீடுகள்தோறும் சென்று குடிநீா் இணைப்புக் குழாயை துண்டித்து விடுங்கள், இல்லையேல் நாங்கள் துண்டிக்க நேரிடும் என கூறிவிட்டுச் சென்றாா்களாம்.
இந்நிலையில் ஒருவாரமாகியும் குடிநீா் இணைப்பை துண்டிக்காததால் வெள்ளிக்கிழமை காலை அதிகாரிகள் தில்லை நகருக்குச் சென்று குடிநீா் இணைப்பை துண்டிக்க முயன்றனா்.
இதனைக் கண்ட அப்பகுதியினா் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ராயனூா்- ஆட்சிமங்கலம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த தாந்தோணிமலை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் இணைப்பை துண்டிக்காமல் நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டனா்.