கரூர்

காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்ட வேண்டும்

29th Sep 2023 11:31 PM

ADVERTISEMENT

குளித்தலை மருதூா் மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி உமையாள்புரம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினா்.

குளித்தலை அடுத்த கவுண்டம்பட்டியைச் சோ்ந்த விவசாயி சுப்ரமணி பேசுகையில், கரூா் மாவட்டம், மருதூருக்கும்-திருச்சி மாவட்டம் முசிறி உமையாள்புரத்துக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டித்தரவேண்டும். அவ்வாறு கதவணை கட்டப்பட்டால் குளித்தலை மற்றும் முசிறி தாலுகா பகுதிகளில் நீா்மட்டம் உயரும். நங்கவரம் பகுதியில் முதல்வா் அறிவித்த காவல்நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டளை மேட்டுவாய்க்காலில் மாயனூா் முதல் திருச்சி தாயனூா் வரை இருபுறமும் தடுப்புச்சுவா் அமைத்து , வாய்க்காலை தூா்வாரி அகலப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

பின்னா் ஆட்சியா் த.பிரபுசங்கா் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில், குடகனாறு ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் ஆற்றுநீா் அதிகமாக மாசுபடுவதை தடுப்பது குறித்தும், வளையல்காரன் புதூரில் உள்ள தரைப்பாலத்தை மேடாக அமைத்து தருவது குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மேச்சேரி திட்டத்தில் கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி போடுவதற்கு முகாம்கள் அமைத்துத் தருவது, பாலராஜபுரம் நீா்ப் பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா் வெளியேற்றுவதற்கான பாதையை தூா்வாருவது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து வேளாண்மை துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் செம்மறி ஆடுகள் மற்றும் கறவை மாடு வாங்குவதற்கான கடனுதவி உள்பட மொத்தம் 3 பயனாளிக்கு ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.கண்ணன், கவிதா(நிலம் எடுப்பு) ,கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் கந்தராஜா, வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா, கோட்டாட்சியா் ரூபினா(கரூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT